ஸ்ரீவைகுண்டம் பாலிமர் நியூஸ் செய்தியாளர் மீது தாக்குதல் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் கண்டனம்!

21-06-2019

ஸ்ரீவைகுண்டம் பாலிமர் நியூஸ் செய்தியாளர் மீது தாக்குதல்

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் கண்டனம்!

வேலூர், ஜூன் 21-  

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பாலிமர் நியூஸ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதி பாலிமர் நியூஸ் தொலைக்காட்சி செய்தியாளர் முத்துவேல் மீது கொடூரமாக தாக்குதல் நடந்துள்ளது. கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்திய காவல் ஆய்வாளர் கஜேந்திரனை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்.

உண்மையை வெளி உலகுக்கு கொண்டு வரும் செய்தியாளர்கள் மீது காவல் துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்துடன் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது. காவல் துறை ஏவல் துறையாக மாறியது எப்போது? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு காவல் துறை தரம் தாழ்ந்து வருகிறது. காவல் என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை காவல் துறையினர் மறந்து விட்டனர் போலும். காவல் துறை அராஜகமாக நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

செய்தியாளர்களை செய்தி சேகரிக்க  விடாமல் தடுக்கவோ, அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்கவோ காவல் துறைக்கு எவ்வித உரிமையும் இல்லை. இப்படி சட்டத்தை மீறி எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் போன்று காவல் துறை நடந்து கொண்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இப்படி செய்தியாளர்களின் கடமையை தடுக்க காவல்துறை துடிப்பது ஏன்? இதற்கு பின்னணியில் யார் இயங்குகிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி எல்லை மீறிய வரம்பு மீறி செயல்படும் காவல் ஆய்வாளர் கஜேந்திரனுக்கு பின்புலமாக செயல்படும் கரும்புள்ளி யார்? என்ற கேள்வி பத்திரிகையாளர்கள் மனதில் எழுந்துள்ளது. பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் என்ஜேயூ சார்பில் முறைப்படி புகார் கொடுக்கப்படும். பத்திரிகையாளர்கள் கிள்ளுக்கீரைகள் அல்ல. எவர் உத்தரவுக்கு பயந்து காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது? என்ற கேள்விகளுக்கு காவல்துறைதான் பதில் தரவேண்டும். கூலிப்படையை ஏவி வீச்சரிவாளால் வெட்டும் அளவுக்கு பத்திரிகையாளர்கள் என்ன தீவிரவாதிகளா?.

தொடர்ந்து தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானதாக இருக்காது என்று தெரிவித்து கொள்கிறேன். பத்திரிகையாளர்கள் மீது விழும் ஒவ்வொரு அடிக்கும் காவல் துறை பதில் சொல்லியே ஆக வேண்டும். பத்திரிகையாளர்கள் என்ன சமூகவிரோதிகளா? சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டுவதுதான் பத்திரிகையின் வேலையாகும், கடமையுமாகும். இப்படி செய்தியாளர்களை கடமையைச் செய்யவிடாமல் தடுக்க காவல் துறைக்கு யார் அதிகாரம் வழங்கியது?. அத்துமீறி, எல்லை மீறி நடந்து கொண்ட காவல் துறை ஆய்வாளர் கஜேந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அவர் யாராக இருந்தாலும் அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய காவல் துறைத்தலைவர் ராஜேந்திரன் முன்வர வேண்டும். இந்த அதிரடி நடவடிக்கை மற்ற காவலர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். காவல்துறையே பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது வெட்ககேடான விஷயமாகும்காவல் துறையினர்தான் பத்திரிகையாளர்களை காப்பாற்ற வேண்டும்.

காவல் நிலையங்களில் காவல் துறை உங்கள் நண்பன் என்று ஏட்டளவில் எழுதி வைத்திருந்தால் மட்டும் போதாது, அதை நடைமுறையில் பின்பற்றி காவல் துறையினர் கண்ணியமாக நடந்து கொள்ள பழகி கொள்ள வேண்டும்.

இனி வரும் காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் என்பது இனி எங்கும் நடக்காதவாறு காவல் துறை தலைவர் ராஜேந்திரன் தமிழக காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பி பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்செய்தியாளர் முத்துவேலுக்கு ஒருவேளை அசம்பாவிதம் நேர்ந்திருந்தால் அவரது குடும்பத்துக்கு தேவையானவற்றை காவல் ஆய்வாளர் கஜேந்திரன் நிறைவேற்றி தருவாரா?. கோபம் எப்படி அவரது கண்களை மறைத்தது? அவர் இப்படி வெறிபிடித்து நடக்கும் அளவுக்கு நடந்து கொள்ள காரணம் என்ன?. முத்துவேலின் விரல்கள் கத்தி வெட்டில் துண்டாக்கப்பட்டுள்ளது. இது திரும்ப வருமா?. ஊனமாக்கப்பட்டுள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ள செய்தியாளர் குடும்பத்துக்கு யார் பாதுகாப்பு?. 24 மணி நேரமும் காவல் துறையினர் ரோந்து வருகிறார்களோ இல்லையோ பத்திரிகையாளர்கள் நாட்டில் வலம் வந்து கொண்டுதான் உள்ளனர். காவல் துறையினருக்கு ஆபத்து என்றால் கூட அவர்களது செய்திகளை கூட வெளியிடுவது பத்திரிகையாளர்கள்தான் என்பதை மறந்துவிடக் கூடாது.

இதுநாள் வரை நடந்த சம்பவங்கள் நடந்தவையாக இருக்கட்டும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தால் விளைவு கடுமையாக இருக்கும் என்று எச்சரித்து கொள்கிறேன். அது எந்த துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் என்ஜேயூ சும்மா பார்த்து கொண்டு போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும் விட்டுவிடாது, பதிலடி கொடுக்க தயாராக இருக்கிறது என்பதை இதன் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன். பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து பதிலடி கொடுக்க ஆரம்பித்தால் அரசு எந்திரம் ஸ்தம்பித்து விடும். அரசின் செயல்பாடுகளையும், நலத்திட்டங்களையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் முக்கிய பணியை பத்திரிகை துறையே செய்கிறதுபத்திரிகையாளர்மீது நடக்கும் வன்முறைகளை தடுத்து உரிய பாதுகாப்பு வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறையினர் மாமூல் வசூலிப்பது காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது என நீதிபதி சுப்பிரமணியம் கூறியுள்ளார். இப்படி இருக்கும் போது மக்கள் எப்படி காவல்துறையினரை நண்பர்களாக பார்ப்பார்கள்? என்றும் நீதிபதி வினவியுள்ளார்.

மாமூல் வசூல் மற்றும் லஞ்சம் வாங்கும் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், நீதிபதி ஆணையிட்டுள்ளார். மாமூல் வசூலிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு காவல்துறையினர் செயல்களை கண்டு நீதித்துறையினரே வன்மையாக நேற்று கண்டித்துள்ளனர்.

காவல்துறையின்  செயல் கேள்விக்குறியாகி வருகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. காவல்துறையினருக்கு பாதுகாப்பாகவும் அவர்கள் பணிக்கு உதவியாகவும் விளங்கும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஜனநாயக படுகொலையாகும்-.

அத்துடன் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அரசு பள்ளியில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது என்பதை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை அந்த பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியர்கள் நேற்று கொடூரமாக தாக்கியுள்ளனர். இவர்கள் ஆசிரியர்களா? குண்டர்களா?. இவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தி அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும்இல்லை யெனில் சட்டரீதியான நடவடிக்கைக்கு கல்வித்துறை பரிந்துரை செய்ய வேண்டும். பிள்ளைகளுக்கு பாடம் போதிக்காமல் எப்படி தாக்குவது என்பதை கற்பிக்க அல்ல ஆசிரியர் பணி என்பதை சக ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். “சாது மிரண்டால் காடுகொள்ளாது என்பதை பத்திரிகையாளர்களை தாக்குபவர்கள் ஒரு நிமிடம் நினைத்து பார்க்கவேண்டும்.

இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி வழக்குப்பதிவு செய்து ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கைகளை என்ஜேயூ மேற்கொள்ளும் என்றும் கா.குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.