செய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை

18-07-2019

செய்தித்துறை அமைச்சரிடம் என்ஜேயூ தலைவர் கோரிக்கை

நலவாரியம், ஓய்வூதியம், கல்வி உட்பட 11 கோரிக்கை தீர்மானம் 

 வேலூர், ஜூலை 18-

செய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் (Tamil Nadu Legislative Assembly) செய்தி மக்கள் தொடர்புதுறையின் இன்றைய மானிய கோரிக்கையின் போது நிறைவேற்றி தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு செய்தியாளர்களின் வாழ்வு வளம்பெற செய்ய வேண்டும் என்று ஓய்வூதியம், பாதுகாப்பு, கல்வி உதவி உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றிய கோரிக்கை மனுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை சந்தித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் நேற்று வழங்கினார்.

ஓய்வூதியம், பாதுகாப்பு, கல்வி உதவி, மருத்துவ உதவி,  உட்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றிய கோரிக்கை மனுவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை சந்தித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் வழங்கினார். அப்போது பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தேசிய தலைவர் கா.குமாரிடம் கோரிக்கை மனுவை பரிசீலிப்பதாக நம்பிக்கை அளித்தார். 

மானிய கோரிக்கை நடைபெறும் வேளையில் செய்தியாளர்களின் கோரிக்கைகளை பெறுவதில் முனைப்பு காட்டி நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் குமார் மற்றும் உடன் சென்ற அனைத்து நிர்வாகிகள் மற்றும் சங்கத்தினரிடம் நேரம் ஒதுக்கி கோரிக்கைகளை பற்றி செய்தி துறை அமைச்சர் உரையாடினார். 

இதுறித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  அவர்களுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் மிக்க மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்.

உடன் தேசிய  துணை தலைவர் முகமது கலிமுல்லா, தேசிய இணை செயலாளர் வாசுதேவன், தேசிய ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், மாநிலச் செயலாளர் பிரேம்குமார் மாநில பொருளாளர் ரமேஷ் மாநில இணைச்செயலாளர் லட்சாபதி,  மண்டல தலைவர்  ராமலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் மண்டல பொருளாளர் கருணாகரன்,  செயலாளர் பூவரசன்  வழக்கறிஞர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினர்கள்.

செய்தி மக்கள் தொடர்புதுறையின்  இன்றைய மானிய கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்சரிடம் அளித்த தீர்மானம்&கோரிக்கையில்  கூறியிருப்பதாவது:


ஜனநாயகத்தின் 4-வது தூணாக விளங்குபவர்கள் பத்திரிகையாளர்கள். காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்கள் பாதுகாப்பிற்காகவும், அவர்களது நிதிநிலைமை மற்றும் குடும்ப மேம்பாட்டிற்காகவும் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க சட்டம் 1926ன் கீழ்  (Under Trade Union Act 1926)       பதிவு செய்து  (Reg.No.1595 கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றோம். 
அரசு செய்திகள், திட்டங்கள் என அனைத்தையும் மக்களிடமும், மக்கள் பிரச்சனைகளை அரசிடமும் காலம் நேரம் பாராமல் உழைத்து கொண்டு சேர்க்கும் பாலமாக விளங்குகின்றனர் செய்தித்துறையினர். ஜனநாயகத்தின் மூன்று தூண்களை (சட்டமன்றம், நீதிமன்றம், நிர்வாகம்) இணைக்கும் முக்கிய பாலமாக விளங்குவது நாண்காவது தூணான ஊடகம் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துகொள்கின்றோம். 
எனவே, செய்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்  (Tamil Nadu Legislative Assembly)     செய்தி மக்கள் தொடர்புதுறையின் மானிய கோரிக்கையின் போது நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட்டு செய்தியாளர்களின் வாழ்வு வளம்பெற மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களையும், செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர் /செயலாளர் அவர்களையும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது.

கோரிக்கை 1 - செய்தி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு
செய்திதுறையை சேர்ந்தவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாமல் தொடர்ந்து தாக்கப்படுவதும், செய்தி சுதந்திரத்தை பறிக்கும் விதமாக பொய்வழக்கு புனைவதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. தமிழகம் முழுவதும் செய்தி துறையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது..! இச்செயல் ஜனநாயக படுகொலையே..! செய்தியாளர்களை தாக்குவது நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகும். எனவே செய்தியாளர்களுக்கு செய்தி சுதந்திரம் பாதுக்காப்பு சட்டத்தை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி தர வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.

கோரிக்கை 2-ஓய்வூதியம்
செய்தித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2011ல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது 5,000/- ரூபாயாக வழங்கப்பட்டு வந்த பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை 8,000/- ரூபாயாகவும், அதே போல் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப ஓய்வூதியத்தை 2,500/- ரூபாயிலிருந்து 4,750/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கினார்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மாவின் அரசு, இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு, பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 8,000/- ரூபாயிலிருந்து 10,000/- ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 4,750/- ரூபாயிலிருந்து 5,000/- ரூபாயாகவும் உயர்த்தி மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் த.நா.ச.பே. எண்.:027 நாள்: 19-07-2017 அன்று வழங்குவதாக அறிக்கையில் தெரிவித்தார். இதற்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மிகவும் நன்றி தெரிவித்துகொண்டது. அன்றைய தினமே ஓய்வூதியம் ரூ.15,000ஆக உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. 
ஆனால், தற்போது விலைவாசி உயர்வால் ஓய்வூதியம் ரூ.10,000/- போதுமானதாக இல்லாமல் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் வறுமையின் பிடியில் தவிக்கிறார்கள். எனவே இன்றைய பொருளாதார சூழலையும், பத்திரிகையாளர் நலனையும் கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் 10,000/- ரூபாயிலிருந்து 15,000/- ரூபாயாகவும், அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 5,000/- ரூபாயிலிருந்து 8,000/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி நல்வாழ்விற்கு வழிவகுக்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது

கோரிக்கை 3- பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி
பத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழை திருத்துபவர் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய பொருளாதார சூழலில் வழங்கப்பட்டு வரும் குடும்ப உதவி நிதி அவர்களது வாழ்வாதாரத்தை காக்க போதுமானதாக இல்லாமல் அவர்களது குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே அதனை மும்மடங்காக உயர்த்தி வழங்கி அவர்களது குடும்பம் மற்றும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஒளி ஏற்படுத்த வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.


கோரிக்கை 4-மருத்து உதவிதிட்டம் விதிமுறைகள் தளர்வு
பத்திரிகையாளர் நல நிதியத்திற்கு தனியே நிதி ஒதுக்கப்பட்டு, வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பணியிலிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு கிடைக்கும். வட்டித்தொகையிலிருந்து மருத்துவ நிதி உதவி அளிக்கப்படுகிறது. ஆனால் இன்று வரை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 6 பேரும், பத்திரிகையாளர் நலநிதியிலிலிருந்து 1 நபரும் ஆக மொத்தம் 7 பேர் மட்டுமே (2007ம் ஆண்டு 4 பேரும்; 2008ம் ஆண்டு 2 நபரும், 2009ம் ஆண்டு 1 நபரும்) அதிக பட்சமாக 1,50,000/- ரூபாய் பயன் பெற்றுள்ளார்கள். எனவே அனைத்து பத்திரிகையாளர்களும் மருத்துவச் செலவு உதவி எளிதில் பெற மருத்துவ உதவி திட்டத்தில் உள்ள விதிமுறைகளை தளர்த்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவச் செலவு உதவி தொகை நோய்க்கு ஏற்ப அதிகபட்சமாக ரூ.3,00,000/- வரை மருத்துவ நிதி உதவி உயர்த்தி வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.

கோரிக்கை 5- அரசு வாடகைக் குடியிருப்பு வசதி
பத்திரிகையாளர்களுக்கு அரசு வாடகைக் குடியிருப்பு வசதி, பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சிறப்பு அடிப்படையில் அரசு வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இத்திட்டம்  செயத்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாக சென்றடையவில்லை. இத்திட்டம் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முறையாகச் சென்றடைய வழிமுறைகளை வகுத்து முறைப்படுத்த வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.

கோரிக்கை 6- வீட்டுமனை வசதி
இத்திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் மாவட்ட அளவில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை ஒழுங்குபடுத்த பத்திரிகையாளர் நிர்வாகத்தின் பரிந்துரையின் மூப்பு (Seniority   Based)  அடிப்படையிலே  ஒதுக்கீடு செய்ய ஆவண செய்யவேண்டும். அவ்வாறு செய்யும்பட்சத்தில் உண்மையான பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் சென்றடையும்.

கோரிக்கை 7- கல்வி உதவி
செய்தித் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். நமது பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, தெலங்கான, புதுச்சேரி மாநிலங்களில் பல்வேறு கல்வி சலுகைகள், கட்டணமில்லா கல்வி போன்றவற்றை வழங்கி வருகின்றன. கல்வியில் சிறந்து விளங்கும் நமது மாநிலத்தில் செய்தித்துறையைச் சேர்ந்தவர்களது பிள்ளைகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, அவர்களது கல்வி கடன் சுமை ஏற்படாமல் தடுக்க வேண்டும். எனவே அரசு ஏற்கனவே வழங்கி வரும ஸிஜிணி 25 சதவீதத்தில் உள் ஒதுக்கீடாக 5 சதவீதம் இடத்தை செய்தித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.

கோரிக்கை 8- செய்தியாளர் அங்கீகார அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை
அரசு அமைக்கும் “செய்தியாளர் அங்கீகாரக் குழு”வின் பரிந்துரையின் பேரில் ஆண்டுதோறும் நாளிதழ்கள்/ தொலைக்காட்சிகள்/ செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர் அங்கீகார அட்டை (கிநீநீக்ஷீமீபீவீtணீtவீஷீஸீ சிணீக்ஷீபீ) வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப் பெற்ற பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு வசதியாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க ஓராண்டு காலத்திற்குச் செல்லத்தக்க வகையில் இலவசப் பயண பேருந்து அட்டை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இலவசப் பயண பேருந்து அட்டைகள் வழங்குவதற்கான தொகையைப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இத்துறை ஈடுசெய்கிறது.
தமிழக அரசு செய்தித்துறையைச் சேர்ந்தவர்களின் நலன் கருதி வழங்கப்படும் செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை வழங்குவதில் விதிமுறைகள் மீறப்பட்டு செய்தித் துறை அல்லாதவர்களுக்கும், தகுதி இல்லாவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. செய்தியாளர் அங்கீகார அட்டை, செய்தியாளர் அட்டை, இலவசப் பயண பேருந்து அட்டை தகுதியானவர்களுக்கு கிடைக்கும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்து ஆவண செய்ய வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.

கோரிக்கை 9- தொழிற்சங்க சட்டம் 1926ன் கீழ் மட்டுமே சங்கம் பதிவு
பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் பதிவுத்துறை (Register Office) Societies Registration Act 1975 ன் கீழ் 7 பேர் கொண்டு சங்கம் என்ற பெயரில் பதிவு செய்து தவறான நடவடிக்கைகளிலும், பத்திரிகையாளர்களுக்கு சேரவேண்டிய பயன்களையும் தட்டிப் பறிக்கின்றனர். 
இதனால் போலி பத்திரிகையாளர்கள் ஊக்குவிக்கப் படுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தொழிற்சங்க சட்டம் 1926ன்  (Under Trade Union Act 1926)  கீழ் மட்டுமே பத்திரிகையாளர்கள் சங்கம் பதிவு செய்யவேண்டும் என்ற திருத்தத்தை செய்து ஜனநாயகத்தின் நான்காவது தூணான செய்தித்துறையை பாதுகாக்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது.

கோரிக்கை 10- நல வாரியம்
அனைத்து துறையைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழகத்தில் நலவாரியம் செயல்படுகிறது. ஆனால், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளக்கும் செய்தித் துறைக்கு மட்டும் இன்று வரையில் நலவாரியம் அமைக்கப்படவில்லை. மாறாக மூன்று ஆண்டுக்கு ஒரு முறை குழு அமைத்து நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது. எனவே செய்தித்துறையைச் சேர்ந்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் முறையாக செய்தித் துறையை சேர்ந்தவர்களுக்கு சென்றடைய தமிழக அரசு, செய்தித்துறை நலவாரியம் அமைக்கவேண்டும். இதனால் போலி பத்திரிகையாளர்கள், போலி செய்தியாளர்கள் சங்கங்கள் தடுக்கபட்டு உண்மையான செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். நலத்திட்டங்கள் மற்றும் அரசு அளிக்கும் சலுகைககளும் முறையாக சென்றடைய ஏதுவாகும். எனவே தமிழக அரசு செய்தித் துறை நலவாரியம் அமைக்க ஆவண செய்யவேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கேட்டுக் கொள்கிறது. 

கோரிக்கை 11- டோல் ஃபிரீ கட்டணச் சலுகை
தமிழகத்தில் உள்ள டோல் ஃபிரீக்களில் விஐபிக்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசியல்வாதிகள் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் இலவசமாகச் செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்காமல் அனுப்பப்படுகின்றன. ஆனால் பத்திரிகையாளர்கள் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களின் வாகனங்களுக்கு டோல் ஃபிரீயில் இலவசமாக செல்லவோ அல்லது சலுகை கட்டணம் செலுத்தவோ மத்திய அரசுடன் மாநில அரசு பேசி அனுமதி வாங்கித் தர வேண்டும். இதற்கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு பெற்றுத் தந்து உதவுமாறு தங்களை மிகவும் தாழ்மையுடன் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கூறிய அனைத்து கோரிக்கைகளையும் தீர்மானமாக உலக பத்திரிகை சுதந்திர தினமான மே மாதம் 3ம் தேதி, 2019 ஆண்டு அனைத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநரும், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவருமான கா.குமார்  அவர்கள் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களிடம் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.